Breaking News

புதிய பொலிஸ் பேச்சாளராக நிஹால் தல்துவ நியமனம்!

பொலிஸ் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பிரிவு மற்றும் பொதுமக்கள் உறவுகள் பிரிவுக்கு பொறுப்பான பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ செயற்பட்டு வந்த நிலையிலேயே, அவர் பொலிஸ் பேச்சாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

ஏற்கனவே பொலிஸ் தலைமையகத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக நிஹால் தல்துவ செயற்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் ஊடகப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையிலேயே அவர் தற்போது பொலிஸ் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, இதுவரை பொலிஸ் திணைக்களத்தின் பேச்சாளராக செயற்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, அப்பதவியிலிருந்து இன்றுடன் விடைபெற்ற நிலையில், தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

பொலிஸ் குற்றவியல் மற்றும் போக்குவரத்து ஆகிய இரு பிரதான விடயதானங்களின் பிரதானியாக செயற்படும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் வேலைப் பழுவைக் கருத்திற்கொண்டு, ஊடக பேச்சாளர் பதவியிலிருந்து அவருக்கு விடுப்பளிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித் ரோஹன, பொலிஸ் அத்தியட்சகராக இருந்தது முதல் 4 தடவைகள் பொலிஸ் திணைக்களத்தின் பேச்சாளராக செயற்பட்டுள்ளதுடன், தற்போது பொலிஸ் திணைக்கள பதவிக்கு மேலதிகமாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *