Breaking News

ஹிட்லரை போன்று செயற்படும் ஜனாதிபதி; அநுரகுமார திஸாநாயக்க!

சுகாதார தரப்பினர், உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை புறக்கணித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ஹிட்லரைப் போன்று தன்னிச்சையாகவே முடிவுகளை எடுக்கிறார். அவரது முடிவுகளுக்கு பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையின் பல அமைச்சர்களும் இணங்கவில்லை.

அமைச்சரவையில் கொவிட் -19 அறிக்கையை சமர்ப்பிப்பதற்கும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கு இடமளிக்கப்படவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய தனக்குள்ள நிறைவேற்று அதிகாரங்களை வைத்து மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கு பதிலாக , அவர்களை மரணிக்கச் செய்யவே பயன்படுத்துகிறார்.

எனவே மக்கள் தமது உயிரை பாதுகாக்கும் பொறுப்பை இந்த ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்காமல் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஜனாதிபதியின் முட்டாள் தனமான தீர்மானங்களுக்கு மக்கள் இரையாகக் கூடாது என்பதே எமது கோரிக்கை என்றும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் தற்போது 9 நிமிடங்களுக்கு ஒரு மரணம் பதிவாகிக் கொண்டிருக்கிறது. அதே போன்று 150 ஐ அண்மித்தளவில் மரணங்களும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன . நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களில் 5 சத வீதமானோர் உயிரிழக்கின்றனர்.

பாரதூரமான கொவிட் -19 தாக்கத்தை எதிர்கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை மிகவும் அபாய நிலைமையிலேயே உள்ளது. நாளாந்தம் 3000 க்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற நிலையில் வைத்தியசாலைகளில் 50 சத வீத இடத்தை கொவிட்-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு உபயோகிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே வைத்தியவசதிகள் குறைவாகக் காணப்பட்ட நிலையில் தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்தின் மூலம் ஏனைய நோயாளர்கள் பாதிக்கப்படும் வீதம் அதிகரிக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *