பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ் பத்திரங்களை ‘ஒன்லைன்’ மூலமாக வழங்கும் வேலைத்திட்டத்தை பதிவாளர் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் பதிவாளர் திணைக்களமானது கடந்த 2 ஆம் திகதி முதல் இந்த ஒன்லைன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.

இந்த புதிய திட்டத்தின் ஊடாக பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ் பத்திரங்கள் வழங்குவதன்  ஊடாக முறைக்கேடுகளை தவிர்க்கவும், துரித கதியில் சான்றிதழ் பிரதியை பெற்றுக்கொள்ளவும் முடியும் என பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் குறித்து பொதுமக்க‍ள் அறிந்திருக்க வேண்டுமென்பதற்காக நடத்தப்பட்ட ஊடகச் சந்திப்பிலேயே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1960 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை பதிவு ‍செய்யப்பட்டுள்ள பிறப்பு, இறப்பு, விவாகம் என 36 மில்லியன் சான்றிதழ் பத்திரங்கள் பதிவாளர் திணைக்களத்தின் மத்திய செயற்பாட்டு கட்டமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இணையத்தளத்தின்  ஊடாக கட்டணத்தை செலுத்தி உங்களுக்குத் தேவையான சான்றிதழை பெற முடியும். இந்த சேவையை பெற்றுக்கொள்ள விரும்புவோர் www.rgd.gov.lk  என்ற இணையத்தள முகவரிக்கு செல்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். அல்லது 011 2889518 எனும் தொலைப்பேசி  இலக்கத்துக்கு தொடர்புகொண்டு ஒன்லைன் மூலமாக இந்த சேவையை ‍பெற்றுக்கொள்வற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள முடியும்.