Breaking News

இனத்துவேச வார்த்தைகளால் திட்டிய JMO!! 3 பொலிசார் இடைநிறுத்தம்! கைகள் பின்புறம் கட்டப்பட்டு தாக்கிய கொடூரம்

அளுத்கம, தர்கா நகரில் 14 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட உள்ளக விசாரணையை தொடர்ந்து, 3 பொலிசார் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

சப் இன்ஸ்பெக்டர், பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் கொன்ஸ்டபிள் ஆகியோரே இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இடைநீக்கம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் சார்ஜென்ட் ஆகியோர் களுத்துறை பொலிஸ் கல்லூரியில் இருந்தும், கொன்ஸ்டபிள் அளுத்கம பொலிஸ் நிலையத்தில் இருந்தும் அந்த சோதனைச்சாவடிக்கு கடமைக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அளுத்கம தர்கா நகரில் ஆட்டிசம் குறைபாடுள்ள 14 வயது சிறுவனை பொலிசார் கொடூரமாக தாக்கிய விவகாரம் தொடர்பாக பொலிஸ் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவத்திற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் குமார் சங்கக்காரவும் இதனை எதிர்த்துள்ளார்.
அஹமட் தாரிக் என்ற இந்த 14 வயது சிறுவன் தனது தந்தையுடன் அளுத்கம, தர்கா நகரில் வசித்து வருகிறார். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தாரிக்கின் தாய், குழந்தையாக இருந்தபோது அவரைக் கைவிட்டு சென்றுவிட்டார். தந்தையார் கடையொன்றில் வேலை செய்து, குழந்தையை கவனித்து வருகிறார்.

கடந்த மே 25 ஆம் திகதி தாரிக் அருகே ஒரு கடைக்குச் சென்றார். தர்கா நகரில் அம்பாக சந்திக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் சோதனைச் சாவடியின் மறுபக்கத்தில் வீதியோரமாக சைக்கிளுடன் மோதுகிறார். அவர் அந்த விபத்திலிருந்து தன்னை விடுவிக்க முயன்றபோது, சிவிலுடையிலும், சீருடையிலும் இருந்த பொலிஸார் அவரை பிடித்து வீதிக்கு மறுபக்கமாக உள்ள பொலிஸ் சோதனைச்சாவடிக்கு இழுத்த வரப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார்.
அப்போது முச்சக்கர வண்டியில் வந்த பொதுமகன் ஒருவர், தனது முச்சக்கரவண்டியிலிருந்த கயிற்றால் சிறுவனின் கைகளை பின்புறமாக கட்டியுள்ளார்.
தனது மகன் பொலிஸ் அதிகாரிகளால் தாக்கப்படுவதை அறிந்ததும், தந்தை ஏ.எச்.எம்.வஜிர் அங்கு சென்றிருந்தார்.
மகனின் கைகளை கட்டி, கடுமையாக தாக்கியதாக சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
அளுத்கம பொலிசில் அவர் முறையிட்டதை தொடர்ந்து, சிறுவன் பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக சிறுவனை 14 நாட்களுக்கு ரிமாண்ட் செய்யலாம் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக களுத்துறைக்கு பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டதை தொடர்ந்தும், முன்னாள் அமைச்சர் அலிசாஹிர் மௌலானா இந்த விவகாரத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததை தொடர்ந்தும் விவகாரம் பூதாகாரமாகியுள்ளது.
முற்றிலும் அருவருப்பான செயல். இது குறித்து விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற எந்தவொரு செயலையும் அனுமதிக்கவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ ​​முடியாது என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இதேவேளை #justicefortharique என்ற ஹாஷ்டேக் பிரபலமாகி வருகிறது.
நடந்தது என்ன??

விஷேட தேவையுடைய இளைஞன் தாரிக் அஹமட் மீதான பொலிஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. இவ்வாறானவர்களுக்கு நடக்கக்கூடிய அநீதிகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு நீதி கிடைக்க முயற்சி செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
அளுத்கம, தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயதான விஷேட தேவையுடைய இளைஞன் தாரிக் அஹமட் கடந்த மாதம் 25 ம் திகதி வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வந்தவேளை பொலிஸாரினால் மிகவும் கொடூரமாகத் தாக்கப்பட்டார். இதனை சம்பவ இடத்திலிருந்து பெறப்பட்ட இரண்டு கண்காணிப்புக் கமரா காணொளிகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தச் சம்பவமானது அளுத்கம பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தாரிக் அஹமட் தனது 4 வயது தொடக்கம் மூளை வளர்ச்சி குறைபாட்டு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்திய அறிக்கைகள் கூறுகின்றன. 14 வயதினை அடைந்திருந்தாலும் 6 வயது குழந்தைக்குரிய உடலியல் தன்மைகளையே அவர் கொண்டிருந்தார் என அறியப்படுகிறது.
கடந்த 25 ம் திகதி ஊரடங்கு வேளை துவிச்சக்கர வண்டியில் சுற்றித்திரிந்த தாரிக், தர்கா நகரின் அம்பகஹ சந்தியை அடைந்த வேளை, அங்கு காவலரணில் கடமையிலிருந்த பொலிஸார் தடுத்து நிறுத்தினர். விஷேட தேவையுடைய இளைஞராக இருந்தமையாலும், சடுதியாகப் பேசக் கூடிய திறனில்லாதவராக இருந்தமையாலும் பொலிஸாரின் கேள்விகளுக்கு அவரால் உடன் பதிலளிக்க முடியவில்லை.

இதனால் ஆத்திரமுற்ற பொலிஸார், துவிச்சக்கர வண்டியை தள்ளி அவரை வீழ்த்தினர் .கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கத் தவறியமையால், சம்பவ இடத்திலிருந்த ஒருவர், இவரது பெயர் தாரிக் அஹமட், இவர் ஒரு விஷேட தேவையுடைய இளைஞர் என்று கூறியதும் (அவர் ஒரு முஸ்லிம் என்பதை தெரிந்துகொண்டதும்) மிகவும் கடுமையாகவும், ஈவிரக்கமில்லாத வகையிலும் அவரைத் தாக்க ஆரம்பித்தனர். அங்கு கடமையிலிருந்த 6 பொலிஸார் மற்றும் வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த 2 சிவிலியன்கள் என சுமார் 8 பேரளவில் தாரிக்கை சரமாரியாகத் தாக்கினர்.
கைகள் இரண்டையும் பின்புறமாகப் பிணைத்து முகம், கைகள், கால்கள், முதுகு என உடம்பின் பல பகுதிகளையும் கொடூரமாகத் தாக்கினர். இத் தாக்குதலால் தலையில் ஒரு வெட்டுக்காயம் உட்பட உடம்பின் பல பகுதிகளிலும் பல காயங்கள் காணப்பட்டன.
தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தந்தை, கைகால்கள் பிணைக்கப்பட்ட நிலையிலும், உடல் முழுக்கக் காயங்களுடனும் துடித்துக்கொண்டிருந்த தனது மகனைக் கண்டதும் கதறியழுதார். தனது மகன் 14 வயதினை அடைந்திருந்தாலும் சிறு குழந்தைக்குரிய மன நிலையில் இருந்ததால் தனது மகனை ஒரு பூவைப் போலவே பாதுகாத்து வந்திருந்தார். மகனது நிலையைக் கண்டதும் அவரது மனது சுக்குநூறாகியது.
தனது மகன் மூளை வளர்ச்சி குன்றிய ஒருவர் அவரை விடுவியுங்கள் என்று பொலிஸாரிடம் மன்றாடினார். இதை பெரிதுபடுத்தக்கூடாது என்ற அச்சுறுத்தல் எச்சரிக்கையுடன் தாரிக்கை அவனது தந்தையிடம் பொலிஸார் ஒப்படைத்தனர். இந்த அச்சுறுத்தல் காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கும் அவர் கொண்டு செல்லவில்லை. இதனால் தாரிக் மிகவும் மோசமாக பாதிப்படைந்தார்.

தெரிந்தவர்களின் அழுத்தம் காரணமாக தாரிக்கின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றார். ”மனநலம் குன்றிய இளைஞனை வெளியே நடமாட விட்டது உங்களது தவறு” என்று குற்றம் சுமத்தி அவரைத் திருப்பியனுப்பினர்.
அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்கும் இது தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
பின்னர், நலன் விரும்பிகளின் உதவியுடன் களுத்துறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் செய்யப்பட முறைப்பாட்டினையடுத்து இளைஞனின் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தாரிக், அவரது தந்தை மற்றும் பிறிதொரு பொலிஸ் உத்தியோகத்தருடன் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் (JMO ) மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு தாரிக்கை பரிசோதித்த JMO, பொலிஸ் உத்தியோகத்தரிடம் ”அங்கொடைக்கு அனுப்ப வேண்டியவனை இங்கே ஏன் கொண்டு வந்தீர்கள்? இவர்களை (முஸ்லீம்) போன்றவர்களால்தான் நாம் அனைவரும் இன்று முகக் கவசம் அணிய வேண்டி வந்திருக்கிறது. இவர்களைத்தான் முதலில் தண்டிக்க வேண்டும்” என்று இனத்துவேச வார்த்தைகளால் திட்டினார்.
பின்னர் அந்த JMO , சிறுவன் தாரிக் தொடர்ச்சியாக மருந்துகள் உட்கொள்கிறானா இல்லையா என்று அவர்களிடம் விசாரிக்காமலேயே , ”சில வாரங்களாக மருந்து உட்கொள்ளாத காரணத்தினால் சிகிச்சைக்காக அங்கொடை மனநல வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு” தன்னிச்சையாக அறிக்கையளித்தார்.
அதிர்ஷ்டவசமாக தாரிக்கிற்கு பல வருடங்களாக மருத்துவ சிகிச்சையளிக்கும் மனநல மருத்துவர் அங்கு கடமையிலிருந்தார். தாரிக் தொடர்ச்சியாக மருந்துகளை உபயோகிப்பவர் என்று அவருக்கு தெரியுமாதலால், வழக்கமான மருந்துகளை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
https://www.facebook.com/110Nws/videos/315527266117522/
இந்தச் சம்பவத்தினை பொலிஸார் இயன்றளவு மூடிமறைக்க முயன்றாலும், கண்காணிப்புக் கமரா காணொளிகள் மூலமாக உண்மைத் தன்மை வெளிப்படுத்தப்பட்டது.
அண்மைக் காலமாக பொலிஸாரின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை அவதானிக்க முடிகிறது. ஊரடங்கு அமுலில் இருந்தபோது மீறியவர்களை பொலிஸார் கொடூரமாகத் தாக்கிய சம்பவங்கள் பலவற்றினையும் நாம் அறிகிறோம்.
இவ்வாறு இனம், மதம் என்ற வேறுபாடுகளினை அடிப்படையாக வைத்து அநியாயமிழைக்கப்பட்ட, நீதி மறுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இருக்கிறார்கள்.
இனவாத விசக் கருத்துக்களை விதைக்கும் இவ்வாறான JMO போன்றவர்களின் அநாகரிக செயற்பாடுகள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
இதற்காகவே நான் #JusticeForThariq “தாரிக்கிற்கு நீதி கிடைக்க வேண்டும்” என்னும் தொனியில் ஒரு செயற்திட்டத்தினை ஆரம்பித்துள்ளேன். இந்த செயற்திட்டத்துக்கு நாமல் ராஜபக்‌ஷ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோர் உள்ளடங்கலாக பிரபலமான அரசியல் தலைவர்கள், பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் என்னுடன் மும்முரமாக இணைந்து செயலாற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.
வியாழன் காலை Twitter ஊடாக எழுப்பப்பட்ட நீதிக்கான குரல் தேசியத்தையும் தாண்டி , பல தேசங்களிலும் உசுப்பி விடப்பட்டுள்ளது, உலகளாவிய விழிப்பின் ஊடாக நீதிக்கான போராட்டம் வலுக்கிறது,

அமெரிக்காவில் பொலிஸார் மேற்கொண்ட இனவாத செயற்பாடுகளுக்கெதிராக குரல் கொடுக்கும் நாங்கள், எமது நாட்டில் சிறுபான்மையினருக்கெதிராக நடத்தப்படும் இவ்வாறான மிலேச்சத்தனமான இனவாத செயற்பாடுகளுக்கெதிராகவும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க முன்வர வேண்டும். மேலும், இவ்வாறான இனவாத செயற்பாடுகள் நாட்டின் சிறந்த எதிர்காலத்தை பாதிக்கும் என்பதனைக் கவனத்திற்கொள்ளவேண்டும். இவ்வாறான அநியாயமிழைக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தவறினால் நாமும் குற்றவாளிகளாவோம்.
நேற்று மாலை நான் அளுத்கமைக்கு பாதிக்கப்பட்ட இளைஞன் தாரிக்கின் வீட்டுக்குச் சென்றேன். குறித்த சம்பவத்தினால் மிகவும் இறுக்கமான நிலையிலிருந்த தாரிக், எங்களைக் கண்டதும் சந்தோசமான மன நிலைக்கு மாறிவிட்டார். எனது அருகில் அமர்ந்து என்னுடன் விளையாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மிகவும் கலகலப்பாக இருந்தார், அந்தப் பிள்ளையுடன் கழித்த அந்த சொற்ப நேரம் எனக்கு மிகுந்த சந்தோசத்தினையும், திருப்தியையும் தந்தது.
உண்மையில் அந்த ஏழை சிறுவனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான குரல் ஓங்கி வரும் நிலையில் அதற்கான நியாயம் கிடைக்கும் என முழுமையாக எதிர்பார்க்கிறேன் என முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

About kalaiselvi

Check Also

நாடு முடக்கப்படுமா? – அறிவித்தது அரசு!

நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு தேவைப்பட்டால் மட்டுமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் சற்றுமுன்னர் …