Breaking News

கொழும்பு அபாய பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தப்பிவந்தவர்கள்!! ஒருவர் மாட்டினார்

நாட்டில் கோரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டம் டாம் வீதியில் தங்கியிருந்த ஒருவர் பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.
இவ்வாறு தப்பி வந்தவரை உடனடியாக தேடிக் கண்டறிந்த வலி.மேற்கு பிரதேச சுகாதார பரிசோதகர்கள், அவரை சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் கொழும்பு டாம் வீதியில் தங்கியிருந்த சுழிபுரம் – தொல்புரம் முத்துமாரி அம்மன் ஆலய வீதியைச் சேர்ந்த புத்தகக் கடையில் பணியாற்றும் 30 வயதுடையவரே சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு பொருள்களை ஏற்றி வந்த பாரவூர்தியிலேயே அவர் தப்பி வந்துள்ளார்.
தகவலறிந்த வலி.மேற்கு சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையிலான சுகாதார பரிசோதகர்கள், அவரைத் தேடிக் கண்டறிந்து வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தியுள்ளனர்.
பாரவூர்தியின் சாரதி மற்றும் உதவியாளர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை, நாட்டின் அபய வலயங்களாக அறிவிக்கப்பட்ட பல பகுதிகளில் இருந்து ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த முன்னர் விடுமுறையில் சென்ற பல தாதிய உத்தியோகஸ்தர்கள் அண்மைக்காலமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுக்கொண்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் தங்கள் சொந்த இடங்களிற்கு செல்ல முடியாமல் இருந்த ஒரு தொகை தாதியர்கள் அவர்களின் சொந்த இடங்களிற்கு நோயாளர் காவுவண்டியில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்களை அங்குள்ள அதிகாரிகள் 14 நாட்கள் அவரவர் வீட்டினில் தனிமைப்படுத்தி உள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை, அபயகரமான பகுதிக்குள் இருந்து யாழ் வந்தவர்களை விடுதிகளில் அன்றே பணிசெய்ய விட்டுள்ளதாகவும் இதனால் பல்வேறு மட்டங்களில் உள்ளோர் இவர்களுடன் முரன்பட்டு கொண்டதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறிருக்க, திருகோணமலை பகுதியிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுதலாகி வந்து கடமை புரிந்த சிரேஸ்ட தாதிய உத்தியோகஸ்தர் ஒருவர் இவ்வாறு 14 நாட்கள் விடுமுறையில் நோயாளர் காவு வண்டியினூடாக திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இதன்போது குறித்த நோயாளர் காவுவண்டி விபத்துக்குள்ளாகி அவர் காயங்களிற்கும் உள்ளாகியிருந்துள்ளார்.
இதேவேளை இவரது கணவர் நோய்வாய்ப்பட்டு, நேற்று முந்தினம் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்துள்ளார்.
குறித்த உத்தியோகஸ்தர் யாழில் இருந்து சென்றமையை காரணம் காட்டி அவரது கணவர் கொரோனா தொற்றுக்கொள்ளாகி இறந்தாரா எனும் சந்தேகத்தில் இவர்கள் தனிமைபடுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனைக்கான மாதிரி அனுப்பப்பட்டிருந்தது. பின்னர் நேற்று மாலை கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் பெறப்பட்டு, உடலானது உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக திருகோணமலை வைத்தியசாலை சூழலில் சலசலப்பு நிலை ஒன்று காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.