Breaking News

அப்பாவி சிறுமிக்கு எமனான மின்னல்

நாட்டில் பல பாகங்களிலும் மழையுடனான காலநிலை காணப்படுகின்ற நிலையில் மின்னல் தாக்கி சிறுமியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த துயர் சம்பவமொன்று பதுளை, ஹல்துமுல்ல பிரதேச செலயகத்துக்குட்பட்ட ஊவா மாளிகா கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாண்டு நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மோகன்ராஜ் ருக்‌ஷி (வயது -10) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வறுமையின் கோரப்பிடியால் ருக்‌ஷியின் குடும்பம் மண் குடிசையொன்றிலேயே வாழ்ந்து வந்தது. மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகள் கூட அதில் இல்லை.
இராட்சத மரமொன்றுக்கு கீழ்தான் அந்த குடிசை அமைந்துள்ளது. நாட்டில் பலபகுதிகளிலும் தற்போது மாலை வேளைகளில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது.
ஓக்வில் தோட்டத்தைச் சேர்ந்த மேற்படி சிறுமியும் அவரது தாய் மற்றும் சகோதரனும் சேனைப் பயிர்ச்செய்கையினை பாதுகாக்கவும், காட்டு யானைகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் மரமொன்றின் மேல் குடில் அமைத்து இரவு வேளைகளில் வாழ்ந்து வந்துள்ளனர்.
தற்போது கடும் மழை பெய்து கொண்டிருப்பதையடுத்து இடி மின்னல் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில் மின்னல் தாக்கி இச்சிறுமி கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக இச்சிறுமி வெள்ளவாய அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள் அச்சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
சடலம் சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று இறுதிக்கிரியைகள் நடைபெற்றுள்ளன.