Breaking News

அதிர்ச்சி தகவல் கொரோனா தொற்று தற்போது மனிதர்களிடமிருந்து விலங்கிற்கு பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் மனிதர்களிடையே தீவிரமாக பரவிவரும் கொரோனா தொற்று தற்போது மனிதர்களிடமிருந்து விலங்கிற்கு பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

ஹொங்கொங்கில் பதிவாகியுள்ள இந்த முதலாவது சம்பவத்தில், பெண் ஒருவரிடமிருந்து வளர்ப்பு நாய்க்குட்டி ஒன்றுக்கு பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 60 வயது பெண்ணிடமிருந்து அவரின் வளர்ப்பு நாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று தாக்கமானது குறித்த நாய்க்குட்டிக்கு ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக ஹொங்கொங் வேளாண்மை, மீன்பிடித்துறை மற்றும் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் முதலாவது மரணம் பதிவானதை அடுத்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவின் செக்ரமென்டோ மருத்துவமனையில் 71 வயதுடைய ஒருவர் கொரோனா தொற்றினால் பலியானார்.
இதற்கமைய, கொரோனா தொற்றினால் அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
அவற்றுள் 10 மரணங்கள் வொஷிங்டனில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், வொஷிங்டன் மற்றும் ஃப்ளோரிடா பிராந்தியங்களில் கடந்த வார இறுதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, கொவிட் – 19 வைரஸ் தொற்றினால், சர்வதேச ரீதியில் 80 நாடுகளில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் மாத்திரம் மூவாயிரத்து 12 பேர் பலியாகியுள்ளனர்.
இதேநேரம், சர்வதேச ரீதியில் 95 ஆயிரத்து 481 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 430 ஆக அதிகரித்துள்ளது.