Breaking News

மரத்துடன் மோதிய வான்!! குழந்தை உட்பட மூவர் பலி!! 8பேர் படுகாயம் – படங்கள்

அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் நான்காம் கட்டை பகுதியில் புத்தளம் விஷேட அதிரடிப்படை முகாமுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் 12.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்திற்குள்ளான வான் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் 3 வயது குழந்தை, குழந்தையின் தாய் மற்றும் வான் சாரதி ஆகிய மூவருமே உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்த எட்டு பேரில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நீர்கொழும்பிலிருந்து மன்னார் மடு தேவாலயத்திற்கு யாத்திரை சென்ற குழுவினர், மீண்டும் புத்தளம் ஊடாக நீர்கொழும்புக்குச் சென்று கொண்டிருந்த போது புத்தளம் விஷேட அதிரடிப்படை முகாமுக்கு அருகில் அவர்கள் பயணித்த வான் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேனவின் ஆலோசனையில் , உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த நானயக்காரவின் மேற்பார்வையில், புத்தளம் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி எச்.பி.என்.குலதூங்கவின் தலைமையில் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.