Breaking News

முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டுக்குச் சென்றவருக்கு 10 நாட்களின் பின் கொரோனா

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இன்று (04) மாலை 5.30
மணியுடன் நிறைவடைந்த 48 மணி நேரத்துக்குள் 11 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 8 பேரும் இன்று மட்டும் புதிதாக மூன்று தொற்றாளர்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட 11 தொற்றாளர்களில் தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பி, கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொற்று நீக்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பட்ட ஒருவரும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

நேற்று அவர் மத்துகம – நவதுடுவ பகுதியில் வைத்து கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கொடை தொற்று நோய்த் தடுப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த 34 வயது நபர் கடந்த மார்ச் 10 ஆம் திகதி தென் கொரியாவிலிருந்து நாட்டுக்கு வந்துள்ள நிலையில், கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தின் பின்னர் மார்ச் 24 ஆம் திகதி வீடு திரும்பியுள்ள நிலையிலேயே நேற்று கொரோனா தாக்கம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் காலத்தின் பின்னர் வீடு திரும்பியதும் அவரைப் பார்வையிட வந்தவர்கள், அவ்வீட்டில் வசித்த அந்நபரின் தாய் மற்றும் உறவினரான யுவதி ஒருவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள 162 தொற்றாளர்களில் ஐவர் உயிரிழந்துள்ள நிலையில் 27 பேர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 38 ஆகவும் இதற்கு அடுத்தபடியாக புத்தளம் மாவட்டத்தில் 27 பேரும் களுத்துறையில் 25 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளானர்.

கம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தொற்றாளர்கள் 11 பேர் ஆவர். இதற்கு அடுத்தபடியாக யாழ். மாவட்டத்தில் 7 தொற்றாளர்களும் கண்டி மாவட்டத்தில் 6 தொற்றாளர்களும் நேற்று மாலை 5.30 மணி வரையிலான காலப்ப்குதியில் அடையாளம் காணப்ப்ட்டிருந்தனர்.

இந்நிலையில் மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, வடமேல் மாகாணத்தின் புத்தளம், மத்திய மாகாணத்தின் கண்டி, வடக்கின் யாழ். மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் தொர்ரின் அச்சுறுத்தல் தொடர்ந்து உச்ச நிலையில் உள்ளதாக சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *