Home மருத்துவம் கொ ரோனா வருவதற்கு முன்பே வர விடாமல் காப்பது எப்படி??

கொ ரோனா வருவதற்கு முன்பே வர விடாமல் காப்பது எப்படி??

76
0

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள் என விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முடிந்தவரை பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுப்பதற்கு என்ன செய்ய முடியுமோ அத்தனை அறிவிப்புகளையும் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

16 நாட்கள் பொது விடுமுறை என்பது நோயின் பரவலை தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட காலம் ஆகும்.

அந்த காலத்தில் எப்படி செயல்பட வேண்டும், எவ்வாறு வைரஸ் பரவலை கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து நுரையீரல் சிறப்பு மருத்துவர் பால.கலைக்கோவன் சில அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார்.

மக்களை நான்கு வகையாக பிரிக்கலாம். இதுவரை கொரோனா வைரஸ் உறுதிபடுத்தப்பட்ட நபர் சிகிச்சைக்கு சென்று இருப்பார். அவரை A என குறிப்பிடுவோம்.

அவரை சுற்றி உள்ள அவருடைய உறவுகள், தெரிந்தவர்கள், நண்பர்கள் யார் என நாம் எளிதாக அடையாளம் கண்டிருக்கலாம்.

அவர்களை C என குறிப்பிடுவோம். அதன் மூலம் அவர்களையும் தனிமை படுத்தி விடலாம். அதேசமயம் உறுதிப்படுத்தப்பட்ட நபர் இதுவரை வெளியில இருந்த பொழுது யாரையெல்லாம் சந்தித்தாரோ அந்த நபர்கள் எல்லோரும் B என குறிப்பிடப்படுவார்கள்.

அவர்கள் யார் என்பதை உடனடியாக அறிய முடியாது என்பது தான் வருத்தமான உண்மை.

இந்த B நபர் இயல்பாக வெளியில் சுற்றும்போது அவர் மூலம் வைரஸ் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்களுக்கு 14 நாட்கள் வரை தன் உடம்பில் வைரஸ் இருப்பதை அவர்களால் உணர முடியாது.

அதே போல இந்த 14 நாட்களில் எத்தனை நபர்களை சந்திக்கிறாரோ அவர்கள் அனைவரும் D ஆக கருதப்படுவார்கள். B ஆக இருப்பவர் A ஆக உறுதிசெய்யப்படுவதற்குள் வைரஸை தன்னை அறியாமலே பரப்பி விடுகிறார்.

அப்போது D எல்லோரும் தனி தனி B ஆக உருமாறுகிறார்கள். இப்போது அவர்கள் உருவாக்க போகும் D யை கணக்கிட்டு பாருங்கள்.. பதற்றம் உருவாகிறதா? பயம் வருகிறதா? இது தொடர்ச்சியான ஒரு சங்கிலி நிகழ்வு போல சென்று கொண்டிருப்பதால் வைரஸின் பரவலானது வேகமாகி கொண்டிருக்கும்.

இதனை கட்டுப்படுத்துவதற்காக தான் 16 நாட்கள் பொது விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது அனைவரும் பொது நடமாட்டத்தை குறைத்து வீட்டில் முடங்குவதன் மூலம் தற்போது B ஆக இருப்பவர்கள் 14 நாட்கள் வீட்டில் இருப்பதால்,

அவர்கள் A ஆக மாறும் போது அவரை சுற்றி உள்ள அவரது குடும்பத்தினர் மட்டுமே C ஆக மாறுவார்கள். அவர்கள் உடனடியாக தனிமைப் படுத்தப்படலாம்.

ஏற்கனவே A மற்றும் C தனிமைப்படுத்திவிட்டதால் புதியதாக B உருவாக வாய்ப்பில்லை. அதேபோல B மூலம் உருவாகும் D முழுமையாக கட்டுப்படுத்தப்படலாம்.

இந்த 16 நாட்களில் அறியப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கும் போது, முழுமையாக கொரோனவை கட்டுப்படுத்த முடியும்.

அதனால் பொது விடுமுறையை பொறுப்பாக எடுத்துகொண்டு, அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து, நோயை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் முன்வரவேண்டும்.

இதனை பின்பற்றுவதன் மூலம் நோயின் பரவலை மிக எளிதாகக் கட்டுப்படுத்த முடியும் என தெளிவாக விளக்கப் படங்கள் மூலம் தெரிவித்துள்ளார். சீனா இவ்வாறுதான் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து விடுபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோய் வந்த பிறகு சிறந்த மருத்துவத்தை தேடுவதும், நமக்கு தெரியாமலேயே நாம் பரப்புவதும் நம்முடைய வேலை அல்ல.

வரும் முன் காப்பதே நம்முடைய வேலை என்பதால், நாம் அனைவரும் அரசின் உத்தரவிற்கு மதிப்பளித்து வீட்டுக்குள் முடங்குவது தான் கொரோனவை கட்டுப்படுத்த சிறந்த தீர்வாக இருக்கும் என மருத்துவர் கலைக்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் மருத்துவ குறிப்புகளை தெரிந்துகொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here